*
"பண்புடன்" என்ற இணையத் தமிழிதழில் வெளியான
என் கட்டுரை.
மாணவர்கள்
*
37 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்து, இன்று அந்த நீண்ட நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆசிரியராகவே ஆக வேண்டும் என்று நினைத்து அதனாலேயே ஆசிரியனாகவில்லை. தந்தை ஒரு ஆசிரியர். நான் படிக்கும்போது எவ்வித முனைப்புமின்றி, குறிக்கோளின்றி படித்தேன். படித்ததும், அது என்னவோ தெரியவில்லை, எந்த வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் கல்லூரி ஆசிரியர் வேலைக்கு மட்டுமே முயற்சித்தேன். படித்த கல்லூரியிலேயே என் பேராசிரியர் வேலை பார்க்க அழைத்தார். அது எனக்கு அப்போது பிடிக்கவில்லை. இருந்தும் அவர் சொல்கிறாரே என்று விண்ணப்பமிட்டேன். வேலை கிடைக்கவில்லை. என்னைவிட என் பேராசிரியருக்கு வருத்தம். இன்னொரு பேராசிரியர் என்னை சென்னைக்கு ஆராய்ச்சி மாணவனாகக் கூப்பிட்டார். எனக்கு இரண்டாவதுதான் பிடித்தது. ஆனால் வேலைக்குப் போகவேண்டுமென்ற கட்டாயம் இருந்ததால் ஆராய்ச்சி இரு ஆண்டுகளுக்குத் தள்ளி வைப்பதாக எண்ணி, விரிவுரையாளர் வேலைக்கு முயற்சித்தேன். எப்படியாவது மதுரையிலிருந்து குறைந்தது 100 கி.மீ. தாண்டி வேலை வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதே போல் ஐந்தாறு மாதங்கள் கழித்து தஞ்சையில் வேலை கிடைத்தது. அதுவும் அப்போதெல்லாம் முதுகலை படித்திருந்தால் நேரே விரிவுரையாளராகலாம்; அல்லது இன்னொரு சித்தாள் வேலை - demonstrator / tutor - வேலையில் சேர வேண்டும். என் ராசி .. விரிவுரையாளர் வேலை காலி இல்லாததால் அக்கல்லூரியில் 'சித்தாள்' வேலைக்கே சேர்ந்தேன். நல்ல கல்லூரி; மிக நல்ல தலைமைப் பேராசிரியர்; துறையின் செல்லப்பிள்ளை ... இப்படியாக அங்கே வேலை பார்த்தேன்.ஏனோ தெரியவில்லை .. வேறு கல்லூரி .. வேறு வேலை என்ற நினைவே வராத தற்குறியாக இருந்து விட்டேன். மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சிப் படிப்பில் நாட்டம் வைத்து வேலைபார்த்தும் அது முடியாது போயிற்று. அப்போதுதான் எனக்குப் புத்தி லேசாக எட்டிப் பார்த்தது. ஆனால் வயதோ இருபத்தைந்து தாண்டிக்கொண்டிருந்த நேரம். சில முயற்சிகள் எடுத்தேன். எதுவும் பலனில்லாது போயிற்று, ஆசிரியர் வேலை என்பதே நிச்சயமாயிற்று.
ஓரிரு ஆண்டுகளிலேயே ஆசிரியர் வேலை மிகவும் பிடித்துப் போயிற்று. காரணம் வேறு எங்குமில்லை; என் மாணவர்கள்தான். 'சின்னூண்டு சைஸி'லிருந்த எனக்கு பெரிய பெரிய பையன்கள் மாணவர்களானார்கள். 1966-ல் ஆரம்பித்த அந்த ஆசிரிய-மாணவ உறவு முறை 1990 வரை மிகவும் அழகான உறவாக இருந்து வந்தது. வாத்தியாருக்கு இல்லாத பட்டப் பெயர்களா? எனக்கும் நிறைய இருந்தன. அதில் எனக்கு மிகப் பிடித்தது - ரெளடி! அதற்கு அடுத்துப் பிடித்தது - அடைக்கலசாமி: மாணவர்கள் தங்கள் ரகசியங்களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்வதால் வந்த பெயர். அடைக்கலசாமியாக இருந்ததால் தான் atleast நான்கு மாணவ, மாணவியர்களை தற்கொலையிலிருந்து தடுக்க முடிந்தது. இதைப் பற்றி இன்னும் அதிகம் பேசினால் ஒரு வேளை என் 'சுய பீற்றல்கள்' அதிகமாகத் தெரியலாம்! சுருக்கமாகச் சொன்னால், எனக்கு என் மாணவர்களைப் பிடித்தது; அம்மாணவர்களில் பலருக்கும் நான் மிகவும் பிடித்தவனாக இருந்ததாக உணர்ந்தேன். இந்த அளவு என் மாணவர்கள் என்னிடம் கொண்டிருந்த அன்புக்கும், மரியாதைக்கும் நான் தகுதியானவன் தானா என்ற எண்ணம் எப்போதும் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த 'அலைவரிசை' மிகவும் பிடித்துப் போனது.
என் ஆசிரியர்களிடமெல்லாம் எனக்கு ஒரு வருத்தம் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களும் இதில் அடக்கம் எப்போதுமே எந்த ஒரு ஆசிரியரும் வாழ்வில் மாணவர்கள் முனைப்போடு முன்னேற வேண்டும் என்ற தாக்கத்தை, வேகத்தை அளிக்கவில்லை என்ற குறைபாடுதான் அது. கல்லூரி வாழ்க்கையில் மாணவர்கள் அடுத்து என்ன முடிவெடுக்க வேண்டும்; எப்படிப்பட்ட வாழ்க்கை அவர்களை எதிர்நோக்கியுள்ளது என்பவைகளை கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நான் குறிப்பின்றி வாழ்க்கையின் போக்கை அப்படியே ஏற்றுக் கொண்டவன். அது போலவே என் மாணவர்களும் இருந்திடக் கூடாது என்று நினைத்தேன். நான் கல்லூரி ஆசிரியனாகச் சேர்ந்து தேர்வுகள் எழுதும் வயது முடிந்த பின் (!), just for the heck of it, ஐ.ஏ.எஸ். போன்ற தேர்வுக்கு அமரும் உடன் வேலைபார்க்கும் நண்பர்களோடு மாதிரித் தேர்வுகளில் ஈடுபடுவதுண்டு. அப்போதுதான் இப்படிப்பட்ட துறைகள், வேலை வாய்ப்புகள் போன்றவை இருப்பதே எனக்கு நன்கு தெரிந்தது. எதுவுமே தெரியாது, வெறும் புத்தகங்களை மட்டும் கட்டிக்கொண்ட ஒரு 'தர்த்தியான' மாணவனாக நான் இருந்திருக்கிறேன். வாழ்க்கையின் பல வழிகள் ஏதும் எனக்குத் தெரியாது போயிற்று. என் ஆசிரியர்கள் எவரும் எனக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தரவில்லை. இந்த ஏக்கத்தின் வெளிப்பாட்டால் நான் என் மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றியவைகளை அடிக்கடி பேசும் ஆசிரியராக இருக்க முயற்சித்தேன். LUKAT - Let Us Know And Think என்று ஒரு சிறு அமைப்பை ஏற்படுத்தி, மாலை நேரங்களில் சில மாணவர்களோடு மரத்தடியில் அமர்ந்து, எதைப் பற்றியும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசலாமென ஒரு அமைப்பை பல வருடங்கள் தொடர்ந்து நடத்தியும் வந்தேன். ஐ.ஏ.ஏஸ். தேர்வுகளை மனதில் வைத்து இதனை ஆரம்பித்தேன்; பலனும் இருந்தது.
ஒரு மணிநேர வகுப்பில் ஒரு மணி நேரமும் வகுப்பெடுக்கும் 'நல்ல' வாத்தியாராக நான் இருந்ததில்லை; வகுப்பில் பாடம் ஒரு பக்கம் என்றால் மற்ற பலவற்றையும் பேசும் கெட்ட ஆசிரியனாக இருந்திருக்கிறேன். படித்து முடித்தபின் இங்கு கல்லூரியில் படிக்கும் பாடங்கள் வாழ்க்கைக்கு எந்த அளவில் பயன் இருக்குமோ தெரியாது; ஆனால் பேசும் மற்றவைகளில் நிச்சயம் வாழ்க்கைக்குத் தேவையானவை இருக்கும் என்ற நினைப்புண்டு. After graduation, most of them need not remember anything about how a cockroach digests or a frog reproduces but choosing opportunities for future and having a humane life become essential என்பது என் ஆழமான கருத்து. சரியோ ... தவறோ .. அப்படியே நடந்தும் வந்தேன். பலன் இருந்ததாக என் பழைய மாணவர்களிடமிருந்து கிடைக்கும் செய்தி பெருமையாக இருக்கும்; என்னைத் தொடரச் செய்யும்.
ஆசிரிய-மாணவ உறவு என்னைப் பொறுத்தவரை கடைசி வரை நன்றாக இருந்தது. இருப்பினும் 1990-களுக்குப் பிறகு அந்த இறுக்கம் குறைந்ததாக நினைத்தேன். ஒரு வேளை எனக்கு வயதாகிப் போனதால் அப்படி இருந்ததோ என்றும் நினைத்தேன். ஆனால் நிச்சயமாக மாணவர்களின் மனதில் பரவலாக ஏற்பட்டிருந்த பிளவை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் மாணவனாக இருந்த காலம் தொட்டு இதுவரை மாணவர்களின் மன ஓட்டங்களில் முக்கிய சில மாற்றங்களை என்னால் அனுமானிக்க முடிந்தது.
நாங்கள் மாணவர்களாக இருந்த போது நிச்சயமாக நாங்கள் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருந்தோம். கல்லூரிகளில் மூன்று மாதத்திற்கொரு முறையாவது ஒரு வேலை நிறுத்தம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. குழு மனப்பான்மைக்கு - mass psychology - அடிமையாகி இருந்தோம். Students were mostly emotional beings. வேலை நிறுத்தங்கள் கல்லூரியின் பாடத்திட்டத்தோடு இணைந்த ஒன்று போலிருந்தது. அளவுக்கு மீறி வீர உணர்வுகள் 'பொங்கிப் பிரவாகமெடுக்கும்' நேரங்களும் உண்டு. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு அரசையே மாற்றி வைத்தது. அது பெரும்பாலும் மாணவர்களால் உண்டான மாற்றமே.
கல்லூரிகளில் தேர்தல் இருக்கக்கூடாது என்று ஒரு புதிய முடிவை அரசு எடுத்தது. மாணவப் பேரவை இறந்ததும் மாணவர்களின் தீவிர உணர்வுகள் மிகவும் குறைந்து போயின. அடுத்து இன்னொரு மாற்றம் - semester system with internal marks. இதனாலும் மாணவர்களின் உணர்வுகள் மிகவும் நீர்த்துப் போயின. மாணவர்களின் நினைவெல்லாம் மதிப்பெண் பட்டியலில் மட்டுமே என்று மாறிப் போனது. Students are totally now intelligent beings. அது எந்த அளவிற்குப் போனதென்றால் ஆசிரிய-மாணவ உறவே மதிப்பெண்களின் உறவாக மாறிப் போனது. இந்த செமஸ்டருக்கு இந்த வாத்தியார் .. முதலில் இருந்தே சலாம் போடு; அடுத்த செமஸ்டர் .. இனி இந்த வாத்தியார் நமக்கு வரமாட்டார் .. உடு ஜூட்; இனி நான் யாரோ .. அவர் யாரோ! 'எங்க சார்' என்றிருந்த உறவுகள் இல்லாமல் மறைந்து போயே போய்விட்டன. 90களில் இந்த நிலை ஆரம்பித்தது. இன்னும் அது மேலும் மேலும் வளர்ந்து, ஆசிரிய-மாணவ உறவை இன்னும் அதிகமாக பிரித்தன. போதாமைக்கு இன்னொரு காரணியும் வந்தது. self-financing courses. இதனால் கல்லூரி வாழ்க்கை மாணவர்களுக்கே துண்டாகிப் போனது. முதலில் காலை முதல் மாலை வரை கல்லூரி நடந்தது. மாலையில் கலைவிழாக்கள், நான் நடத்தியது போன்ற அறிவுசார் கூட்டங்கள் இவைகள் எல்லாமே மிகவும் குறைந்து போயின. வழக்கமான கல்லூரி நேரம் மாறி, aided courses மாணவர்கள் மதியமே வீடு திரும்ப, மாலை self financing courses மட்டும் மதியத்திலிருந்து மாலைவரை என்றானது. இரு வேறு மாணவர்களுக்குள்ளும் வேறுபாடு. ஆசிரியர்களுக்குள்ளும் இரு வேறு அமைப்புகள். ஒருவருக்கொருவர் ஒட்டுமில்லை; உறவுமில்லை என்றானது.
ஆசிரிய-மாணவ உறவு முறிந்ததும், அழகான அந்தப் பிணைப்புகள் காலத்தோடு காலமாகக் காணாமல் போயின. குரு-சிஷ்யன் எனபது போய், ஆசிரியர் - மாணவர் என்ற நிலைக்கு மாறி, நான் காசு கொடுக்கிறேன் .. நீ படிப்பு சொல்லிக் கொடு .. என்ற வியாபார நிலைக்கு வந்தாகி விட்டது. உணர்வுகள் அறுந்த பின் ஏது பாசமும் பிணைப்பும். மாணவர்கள் தனித்தனியாகி விட்டார்கள். குழு மனப்பான்மை தான் அவர்களை ஒன்று படுத்தும் ஒரே காரணி. அது அறுந்து போனபின் அவர்கள் எல்லாம் தனித்தனி தீவுகளாகி விட்டார்கள். போராட்டக் குணம் என்பதன் பொருளே புரியாமல் போய்விட்டார்கள். தங்களில் ஒருவனுக்கு அநீதி என்றாலும் குரல் கொடுத்த மாணவர்கள் இன்று தனக்கே ஒரு பிரச்சனை என்றாலும் அதைத் தாண்டிப் போகப் பழகிக் கொண்டு விட்டார்கள். எங்கும் எதிலும் மதிப்பெண்கள் .. அதைத் தவிர வேறு எதுவும் அவர்கள் மனதில் தங்குவதில்லை.
ஒரு சிறு உதாரணத்தை, நான் ஏற்கெனவே என் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட ஒன்றை இங்கே தருகிறேன். ராணி மேரி கல்லூரியை இடம் மாற்ற அரசு முடிவெடுத்தது. அக்கல்லூரி மாணவிகள் போராட ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு போராட்டம் நடக்கிறதென்றால் நான் மாணவனாக இருந்த அறுபதுகளில் மாநில மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு போராட்டம் நடந்திருக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போராட்டம் வென்றிருக்கும். எண்பதுகளில் இது நடந்திருந்தால் நிச்சயம் சென்னை மாணவர்கள் ஒன்றிணைந்திருப்பார்கள். ஆனால் இந்தப் போராட்டம் அந்தக் கல்லூரி மாணவிகள் மட்டுமே நடத்திய ஒரு போராட்டமாக இருந்தது. இதை என் மாணவர்களிடம் நான் சொல்லியபோது இன்னொன்றும் சொன்னேன். வெறுமனே அழகிற்காக சே குவேராவின் படத்தைப் போட்ட டி-ஷர்ட் போடுவதால் மட்டும் போராட்ட குணம் உண்டாகி விடாது என்றேன். போராட்ட குணம் இப்படி முழுவதுமாக முடங்கிப் போவதைப் பார்க்கும்போது, இந்த இளைஞர்கள் எப்படி தங்கள் வாழ்நாளில் தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள் என்ற எண்ணம் எனக்குள் எழுவதுண்டு. அடிமைத் தனத்தில் ஊறிப் போனவர்களாகத்தான் நான் அவர்களைப் பார்க்கிறேன். நியாயமான உணர்வுகள் இந்த வயதிலேயே செத்துப் போய்விட்டால் .. எதிர்காலத்தில் இவர்களால் என்ன பெரிதாகச் சாதிக்க முடியும் என்ற கேள்வி என் மனதிற்குள்.
நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன .. என் மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் சரி - இதுதான் இன்றைய மாணவனின் தத்துவம்.
*
இப்பதிவு
என் வலைப்பூவிலும் இடம் பெற்றிருக்கிறது.
*