எழுபதுகளில் அமெரிக்கன் கல்லூரியில் பணி புரிந்து என்னோடு நன்கு பழகிய நண்பர் பேரா.முனைவர் ஜெயராஜ். மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் கழகம் ஆரம்பிப்பதற்கு சில நண்பர்கள் முயற்சியெடுத்துக் கொண்டிருந்தனர்; பொதுவாக, கல்லூரி நிர்வாகங்கள் இந்த முயற்சிக்கு எதிராக இருந்தன. ஜெயராஜிற்கு நண்பராக இருந்த பேரா. ராஜன் என்பவர் இந்த முனைப்பில் முன்னணியில் இருந்தார், அவர் ஜெயராஜைப் பார்ப்பதற்காக ஒரு நாள் மாலை எங்கள் கல்லூரிக்க்கு வந்தார். நானும் ஜெயராஜும் டென்னிஸ் என்ற பெயரில், விளையாட்டு என்ற பெயரில் ஏதேதோ விளையாடிக்கொண்டிருந்தோம்.
பேரா. ராஜன் ஆசிரியர் கழகம் ஆரம்பிப்பது பற்றி பேச ஆரம்பித்ததும் ஜெயராஜ் என்னையும் உடன் சேர்த்துக் கொண்டார். ராஜன் மிக ரகசியமாக இது போன்ற தெரிந்த நண்பர்கள் மூலமாகவே முயன்று கொண்டிருந்தார்; ஆனால் அவர் எங்களிடம் இதைச் சொன்ன போது நாங்கள் முதல்வரைப் பார்க்கலாம் என்று அவரிடம் சொன்னோம். அவர் ரகசியாக இருக்க வேண்டிய கட்டாயம் பற்றிச் சொன்னார். அவர் அப்போதுதான் இன்னொரு கல்லூரியில் ஒரு சில ஆசிரியர்களை ரகசியமாகச் சந்தித்து வேறு ஏதோ ஒரு இடத்தில் முதல் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.
கள நிலவரம் இவ்வாறு இருக்கும் போது நாங்கள் முதல்வரிடம் போவோம் என்று சொன்னது அவருக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் அவர் நம்ப முடியாதபடி எங்கள் கல்லூரி அனைத்து ஆசிரியர்களையும் ராஜன் சந்தித்துப் பேச, நாளும் நேரமும் குறிப்பிட்டு கல்லூரி ஆசிரியர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் எங்கள் முதல்வர்.
கழகமும் ஆரம்பித்தது. பெரிய கல்லூரியில் நிறைய உறுப்பினர்களோடு ஆரம்பித்ததால் ஜெயராஜிற்கு காசாளர் பதவியளிக்கப் பட்டது. ஆனால் சில மாதங்களில் ஜெயராஜ் முனைவர் பட்டத்திற்காக கல்லூரியை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அதன் பின் தற்காலிக காசாளராக நான் சில மாதங்கள் இருந்தேன் என்று என் பள்ளி நண்பனும், ஆசிரியர் கழகத்தின் பெருமை மிகு தலைவராக இருந்த பார்த்தசாரதி பின்னாளில் எனக்கு நினைவுபடுத்தினார்!
மிகப் பல ஆண்டுகள் கழித்து முக நூல் வழியாக மீண்டும் நானும் ஜெயராஜும் இணையத்தில் சந்தித்தோம். பார்க்கும் போது அத்தனை பரவசம் இருவருக்கும். Appearances are deceptive என்பார்களே அது போல் ஜெயராஜ் பார்ப்பதற்கு நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகத் தோன்றியது. ஆனால் இதயக் குறைபாடு ஒன்றினால் நலமில்லாமல் இருக்கிறார் என்று அறிந்த போது மிக வருத்தமளித்தது. மனதை உருத்தியது. தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த நான் சில நாட்களாக அவரிடம் பேசவில்லை. அவரைப் போல் எனக்கும் கொஞ்சம் depression. மீண்டும் பேச ஆரம்பித்தோம். எல்லாம் ஓரிரு மாதங்களே. இந்தச் சமயத்தில்தான் அவர் தன் துணைவியாரோடு பயணம் செய்த வெளிநாட்டுப் படங்கள் என்று உற்சாகமாக முகநூலில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்.
காலம் முடிந்தது. உடல் நலம் பற்றித் தெரிந்திருந்தாலும் அந்தச் செய்தி ஆழமாகத் தைத்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தன் உடலை அமெரிக்கப் பல்கலைக் கழகத்திற்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார் என்பது தெரிந்த போது … இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்கு நான் நண்பனாக இருந்திருக்கிறேனே என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment