அரிஅரவேலன் யரலவழள
பேராசிரியர் திருமிகு சாமுவேல் லாரன்சு Samuel Lawrence மறைந்தார். 1999ஆம் ஆண்டில் மனிதநேயம் இதழ் ஆசிரியர் அமெரிக்கா சென்றிருந்ததால், அவ்விதழைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பைப் பேராசிரியர் ஏற்றிருந்தார். அப்பொழுது அவ்விதழுக்கு மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்றை அனுப்பியிருந்தேன். அதனைப் படித்த பேராசிரியர் தொலைபேசியில் அழைத்து மூலக்கவிதையையும் எனது மொழிபெயர்ப்பையும் வரிக்குவரி ஒப்பிட்டுப் பாராட்டினார்; தொடர்ந்து எழுதுக என ஊக்குவித்தார். இதுவே அவரோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம்.
சில மாதங்கள் கடந்த பின்னர், ஆசிரியர் திருமிகு சூலியசு நடத்திய பூந்தளிர் நூலகத்தில் பேராசிரியரை நேரிற்கண்டேன். நூலகர் இருவரையும் அறிமுகம் செய்துவைத்ததும் ஓரடி முன்னேவந்து புன்சிரிப்போடு எனது முதுகில் தட்டிக் கொடுத்தார்; கடந்த பிப்ரவரி 24ஆம் நாள் எனது வீட்டிற்கு தன் இணையரோடு வந்து நெடுநேரம் செலவிட்டுச் சென்ற இறுதிச் சந்திப்பு வரை நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கண்டதும் கட்டிக்கொண்டு முதுகில் தட்டுவார். உற்சாகமான மனநிலையிலிருந்தால் "இன்னொரு முறை தட்டட்டா" எனக் கூறிக்கொண்டே தட்டிக்கொடுப்பார்.
காலை நேர உலாவில் தான் கண்ட காட்சிகளை முன்னிறுத்தித் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மனித நேயம் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அவற்றைப் பாராட்டினால், ஓர் உதட்டுச் சுழிப்பில் அப்பாராட்டைப் புறந்தள்ளுவார்; அக்கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றிப் பேசத் தொடங்கினால் உற்சாகமாகிவிடுவார்.
பாராட்டி ஊக்குவிக்கும் உங்களின் குணத்தையும் உடல் நலிவுற்ற நிலையிலும் குன்றாத உங்களின் உற்சாகத்தையும் எண்ணியபடியே விடை தருகிறோம் சார்!
No comments:
Post a Comment