Friday, May 31, 2019

Sam on Prof. DSL




DSL  இறந்தும் நாட்கள் ஓடி ஒரு வாரம் முடிந்து விட்டது.


கல்லூரியில் எங்கள் இருவரையும் இணைத்தது எங்கள் ஆசிரியர் சங்கம் - MUTA. நாங்கள் இருவருமே அதில் ஒரே ஒரு தரம் தான் இணைந்தோம் - ஏனெனில் தொல்லைகள் ஏதுமில்லாத எங்கள் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு சங்கம் ஒரு தொல்லை தான். ஏதாவது ஒரு காரணம் தேடி சேருவார்கள். கொஞ்ச நாள். ஏதாவது ஒரு காரணம் சொல்லி விலகுவார்கள். இது பலரிடம் அடிக்கடி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். சங்கத்தில் செயலராக இருக்கும் போது எங்கள் ரத்தத்தில் ஓடுவதெல்லாம் புர்ச்சி ரத்தம் என்பார்கள். அடுத்த மாதம் என்ன blood transfusion நடக்குமோ. புர்ச்சி வெளியேறி இருக்கும். இந்த சூழலில் முதலில் இருந்து ஓய்வு பெரும் வரை சங்கத்தில் தொடர்ந்து இருந்தவர்கள் என்று எங்கள் கல்லூரியில் அந்தக் காலத்தில் கணக்கெடுத்தால் கையளவு எண்ணிக்கையில் தான் இருப்போம். அந்த இணைப்பு என்னையும் லாரியையும் ஒன்றாகச் சேர்த்தது. அதில் எங்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசம். நான் சங்கத்து உறுப்பினர்களோடு இணைந்தும், சங்கத்தில் இல்லாதவர்களிடமிருந்து விலகியும், அல்லது அவர்களை எதிர்த்தும் இருந்து வந்திருக்கிறேன். இதனால் எனக்கு என்னிடமிருந்த conviction காரணமாக நிறைய நண்பர்களும், இன்னும் நிறைய non-நண்பர்களும் இருந்தனர். ஆனால் லாரி எல்லோரிடமும் நன்கிருப்பார். சங்கத்தின் மீது என்னை விட மிக அதிகமான பற்றுள்ளவர். ஆனால் அதை வைத்து - என்னைப் போல் - யாரிடமும் பகைமை காட்ட மாட்டார். அது தான் லாரி! 

அடிக்கடி விளையாட்டாக நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம். நான் அவரை ”நார்லு காட்டான்” (நாகர்கோவில் காட்டான்) என்றும், அவர் என்னை நெல்லைக் காட்டான் என்றும் அவ்வப்போது அழைத்துக் கொள்வோம். அப்படி இருந்த எங்கள் நட்பு எங்களது ஒய்வுக் காலத்தில் புதியதோர் வடிவம் பெற்றது. அவருக்கு கணினியைப் பயன் படுத்த வேண்டுமென்று அத்தனை ஆவல். சின்னச் சின்ன உதவிகள் செய்தேன். ஆனால் அதோடு அவரால் எளிதாக ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அதோடு நான் முதலில் மொழியாக்கம் செய்த “அமினா” நாவல் எங்கள் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை  உருவாக்கியது. அவர் எங்கள் பணி நாட்களில் என்னை ஒரு “விளையாட்டுப் பையனாக” நினைத்திருந்தார். அமினா வாசித்தார். அன்றிலிருந்து பல முறை அந்த நூல் பற்றிப் பெருமையாகப் பேசுவார்
.
“ஏய்யா ... இந்த மாதிரி எழுதக்கூடிய ஆள் என்று என்னை நீர் எதிர்பார்க்கவே  இல்லை. இல்லையா?” என்று கேட்டேன். அப்போதுதான் அந்த விளையாட்டுப் பையன் என்று நினைத்ததைச் சொன்னார். அதன் பின் எப்போதும் இப்போது என்ன செய்கிறாய்? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். எப்போதுமே அவரின் அருகில் நின்று பேசும் போது அவர்களின் தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு பேசுவது அவர் பழக்கம். அமினா வாசித்த பிறகு எப்போதெல்லாம் தொலைபேசியில் பேசுகிறாரோ அப்போதெல்லாம் அந்த “தட்டிக் கொடுத்தல்” தொடர்ந்து நடக்கும். தொலைவின் காரணமாக அடிக்கடி சந்திப்பது இல்லை, ஆனாலும் எப்படியும் வாரம் ஒரு முறையாவது அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்து விடும். இப்போது என்ன செய்கிறீர்கள்? தொடர்ந்து செய்யுங்கள் என்ற தொடர்ந்த உற்சாகமூட்டல் இருக்கும்.

டயாலிசிஸ் வந்ததும் மிகவும் சோர்வாக இருந்தார். ஆனால் ஒரு மாதம் கழித்துப் பார்த்த போது அதிலிருந்து வெளிவந்ததாகக் காண்பித்துக் கொண்டிருந்தார். சின்னச் சின்னப் பிள்ளைகளுக்கும், இளைஞர்களுக்கும் டயாலிசிஸ் நடப்பதைப் பார்த்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். “என் கேஸ் பரவாயில்லை” என்றார். சில மாதங்களில் மனதை நன்கு தேற்றிக் கொண்டார். அதோடு நில்லாமல் மீண்டும் கணினி பற்றித் தெரிந்து கொள்ளவும் ஒரு புதிய கணினி ஒன்று வாங்கவேண்டும் என்று கேட்டார். ஒரு கணினியும் வாங்கும் முனைப்பில் நான் இருந்த போது உடல் நலம் மிகக் குறைந்தது. அப்போது நான் கடைசியாக அவரை வீட்டுக்குப் பார்க்கப் போனேன்.

”கிழித்த நாராய்” கிடந்தார் என்று வழக்கமாகச் சொல்வார்களே .. அந்த வார்த்தைகள் அவரது படுக்கையறையில் நுழைந்து அவரைப் பார்த்ததும் மனதில் தோன்றியது. ஏற்கெனவே டயாலிசிஸ்ஸிற்குப் பிறகு உடல் மிக மிக மெலிந்து இருந்தார். ஆனால் இப்போது அவர் படுத்திருந்த கோலமே அச்சுறுத்துவதாக இருந்தது. உள்ளே நுழைந்து கட்டிலின் பக்கதில் நின்றிருந்தேன். அழுதிடக் கூடாது என்று திடப்படுத்திக் கொண்டேன். மெல்ல பக்கத்தில் அம்ர்ந்தேன். அவர் விழிக்கவில்லை. மெல்ல நெற்றியில் கை வைத்தேன். விழிக்கவில்லை. முத்தமிடத் தோன்றியது. குனிந்து நெற்றியில் மெல்ல முத்தமிட்டேன். விழித்து விட்டார். எழுந்திருக்க முனைந்தார். தடுத்தேன். சிறிது நேரம் படுத்திருந்தார். பின் நான் தடுத்தும் எழுந்து உட்கார்ந்தார். அதுவே எனக்கு ஆச்சரியம் தான்.

இருவரும் ஏதும் பேசவில்லை. பின்னால் மெல்லிய குரலில்”ஏனிப்படியெல்லாம் நடக்கிறது” என்றார். என்ன பதில் சொல்ல முடியும்.  அவர் உட்காரவும் சிரமப் பட்டதாகத் தோன்றியது. படுத்திருக்கச் சொன்னேன். மெல்ல எழுந்தார். என்னால் மேலும் சிரமப் படுத்திக் கொள்கிறார் என்று தோன்றியது. கிளம்புகிறேன் என்றேன். Ok.. We will meet என்றார். நிச்சயமாக அது .... நான் சுகமாகி மீண்டும் பார்த்துப் பேசிக்கொள்வோம் என்ற பொருளில் அவர் சொல்லவில்லை என்று தான் எனக்குத் தோன்றியது. மறுமையின் டச் அதில் இருந்ததாகத்தான் நான் நினைத்தேன். என் இறைமறுப்பு அவர் அறிந்தது தானே. அது அவருக்கு நினைவுக்கு அப்போது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவரே ‘அது எப்படி” என்பது போல் ஏதோ ஒன்றை முணுமுணுத்தார்.  கைகளைப் பற்றி  ”நார்லு காட்டான்” என்றேன். எப்படி அவரால் முடிந்தது என்று நான் நினைக்கும் அளவிற்கு என் கைகளை மிக இறுக்கமாகப் பிடித்தார். எப்படி அத்தனை உறுதி வந்தது என்று ஆச்சரியப்பட்டு போனேன்.  கண்ணீர் வர முயற்சித்தது. இன்னும் அவரோடு இருந்தால் அழுது விடுவேன் என்று உணர்ந்தேன். கஷ்டப்பட்டு அவரை கட்டிலில் மீண்டும் உட்கார வைத்து விட்டு வெளியேறினேன்.

வீட்டின் வாசல் படிக்கு அடுத்து அவரது துணைவியாரிடம் இரண்டு வார்த்தைகள் பேசினேன். திரும்பிப் பார்த்தால் அவர் எப்படி கஷ்டப்பட்டு வெளியில் வந்திருப்பாரோ தெரியவில்லை. படுக்கையறையின் வாசல் வரைக்கு வந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து படுக்க வையுங்கள் என்று சொல்லி விட்டு வெளியேறினேன்.

மருத்துவ மனையில் பார்த்த போது அவர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கின்றேன். என் பெயரைச் சொன்னதும் கண்கள் எடுத்தேறி என்னைப் பார்த்தது போல் தோன்றியது. 



எல்லாம் முடிந்து விட்டது ........



*

. Elango Kallanai ON DSL




. Elango Kallanai ON DSL





*

அடிமேல் அடி என்பது எனக்கு இந்த வருடத்தில் அதிகம். 

எனது தாயார் ஜனவரியில் மறைந்தார். என்னுடைய ஆசிரியர் சாமுவேல் லாரன்ஸின் மறைவு அடுத்தது. 

ஒரு நாள் திருப்பாலையில் உள்ள இயற்கை அங்காடிக்கு வாழையிலைக் கட்டை எடுத்துக் கொண்டு போனேன். "சார் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கேன் , வரவா ?" என்றேன். "உன்னைப் பார்த்தால் உற்சாகம் தான். வா" என்றார்.திங்கள் வியாழன் வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிஸிஸ். டயாலிஸிஸ் முடிந்த அடுத்த நாட்கள் சோர்ந்து இருப்பார். அன்று புதன். வீட்டுக்கு சென்றதும் தழுவிக் கொள்ள வந்தார். கால்களைத் தொட்டு வணங்கினேன். " இதையா உனக்கு சொல்லிக் கொடுத்தேன்?" என்று கடிந்து கொண்டார். 

எனது கல்லூரி நாட்களில் ஜனநாயகம் என்பதை கற்றுக்கொள்ள முதல்க் காரணம் அவரே. இளைஞர்களை அப்படி மதித்த ஒரு நம்பிக்கையாளரை இதுவரை நான் வாழ்நாளில் திரும்பவும் பார்க்கவில்லை. Young minds நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்று திடமாக நம்பும் பழைய தலைமுறை ஆசிரியர். 

கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர் போராட்டம்.அன்று சக மாணவர்களை வகுப்பை விட்டு வெளியேற அழைக்க ஓடுகிறோம். ஒரு வகுப்பில் மாணவர்கள் வெளியே வருவதை ஆசிரியர் ஒருவர் தடுக்கிறார். அந்த வகுப்புக்கு வெளியே இருந்த கண்ணாடியிலான அறிவிப்புப் பலகையை கையால் உடைக்கிறேன். கைகளில் இரத்தம். தலைமறைவாக ஒட முயற்சி செய்கிறேன். லாரன்ஸ் பார்த்து விடுகிறார். கண்டிக்கப் போகிறார் என்று நினைத்து கூசி நிற்கிறேன். பையில் இருந்த பணத்தை எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்து கொண்டு கடைசி வரை என்னை எதுவும் கேட்டதேயில்லை.. 

முதுகலை வந்த போது துறைத் தலைவர் அவரே. மூன்று தாள்களில் எனக்குப் பிடிக்காத ஆசிரியர்கள் இருவர் மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டு விடுகிறார்கள். நான் இவ்வளவு குறைவாக வாங்க வாய்ப்பில்லை என்று வாதாடுகிறேன். என்னுடைய துறைத் தலைவர் லாரன்ஸ் சக ஆசிரியர்களைப் பகைத்துக் கொண்டு நீ மறு திருத்தலுக்குப் போ என்றார். மூன்று தாள்களிலும் 15 மதிப்பெண்களளுக்கு அதிகம். பரீட்சைக்குக் கட்டிய பணம் முதற்கொண்டு எனக்குத் திருப்பித் தர கல்லூரியில் உத்தரவு. அதற்கு பின்னர் அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு என்னுடைய வகுப்புகளுக்குத் தரவில்லை. கடைசி வரை இந்த நீதியுணர்வு தான். லாரன்ஸ் சார். 

கிறிஸ்தவ kindness தான் எனது ஆசிரியரின் செய்தி. அவர் எனக்கு இன்னொரு தாய். எனது ஆன்மீகம் ஆசிரியர்களின் நீதியுணர்வில் கிளைத்து வந்தது. லாரன்ஸ் தான் எனக்கு அதைக் கொடுத்தார். 

அவரை வெறும் உடலாகப் பார்க்க முடியாமல் பதற்றத்தில் நகரை விட்டு ஓடினேன். 

இப்போதும் மூச்சிரைக்கிறது. போங்க சார்.

Karthik Bharathi ON DSL




 Karthik Bharathi ON DSL





*

அருமையான ஆசிரியர்கள் கிடைத்தும் ஆங்கிலம் கைவரப்பெறாத துரதிர்ஷடசாலி நான்.எனக்கு Eng111,Eng 112க்கு ஆங்கில ஆசிரியர்கள்பேராசிரியர் DSL உம்,பேரா. ஐசக்கும் தான். முதுகலை தலைவராக .இருந்தும் இளங்கலை தலைவராக இருந்தாலும்,இருவரும் தமிழ்த்துறையின் இளங்கலை. முதலாமாண்டு இரு பருவங்களுக்கும் வந்து பெரும் ஆபத்பாந்தவர்களாக இருந்தனர். DSL என்று மானவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர். சாமுவேல்லாரன்ஸ் பேராசிரியர்களின் ,பேராசிரியர்களின் ,பேராசிரியர். 

அவர் வகுப்பறை நினைவுகளும்,கல்லூரி வகுப்பறைக்கு வெளியே பல பொழுதுகளும்.சீடுக்குமான உறவுகளும் நினைவு கூறத்தக்கவை
வகுப்பறை ஒன்றில் உங்கள் பெயர்களில் எத்தனை பேருடைய பெயர் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள். பலருடைய பெயர்களை தமிழ் பெயரல்ல என் நிராகரித்தார். வகுப்பு கலகலவும் காரசாரமாகவும் போனது. DSL சத்தமாக கூட பேச மாட்டார். 
சிரிப்பிலும்,எளிய கற்பித்தல் முறையிலும் வகுப்பை கட்டுகோப்பாக வைத்து இருப்பார். என் முறை வந்தது. என் பெயர். வகுப்பறையில் கார்த்தி மட்டும்தான். முதலாண்டில் முதல் பருவம். தமிழ் படிப்புனா என்ன என புரிபடாத காலம். தமிழ்பெயர். என வாதிட்டேன்.மாதம்.நட்சித்திரம்.தீபம் , முருகன். ஆண்டாண்டு காலமாக புழங்கி வருவது என்றெல்லாம் சொன்னேன். என் பெயர் தமிழ் பெயரல்ல என்பதை பொறுமையாக விளக்கினார். மேலும் உன் பெயர் இ விகுதியில் முடிவதால் தொல்காப்பிய்ற் விதிப்படி உன் பெயர் பெண்பாற் பெயர் என அதிர்ச்சியூட்டினார். கற்பிப்பதில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பார். 

சீடு துவங்கிய. போது கல்லூரி துணை முதல்வராக இருந்தார். மதுரை சீடு இன் முக்கிய வருகைதரு ஆசிரியராக விளங்கினார், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு உறசாகம் ஊட்டுவார். உன் ஆங்கிலத்தை மேம்படுத்தினால் உன் சமூகபணி செம்மையுறும் என்பார். உனக்கு சிறப்பு வகுப்பு எதாவது எடுக்கட்டுமா, சேர யாரிடமும் போய் படிக்கிறாயா.என் அன்போடு விசாரிப்பார், கல்லூரி நாடகங்கள்,light and sound ஷோக்கள் முடிந்த்தவுடன் கண்ணீர் கழியும் கண்களுடன் பாராட்டிவிட்டு விடைபெற மனமில்லாமல் விடைபெறுவார்.

பல முன்னேற துடித்த போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் ஆதர்சமாக இருந்தார். சீடு. ஐ மறு உருவாக்கம் செய்த போது தொலைப்பேசியில் மதுரை சீடுக்கு கீழ் to support and empower the underprivileged என்பது. சரியாக இருக்குமா சார். 2007 இல் ஓய்வு பெற்று இருந்தார். கார்த்தி புது பெயரில் ஆரம்பியேன்.இன்னும் உன்னால் சிறப்பாக பணிசெய்ய முடியும். என்றார். மறு முனையில் நான் அமைதியாக இருந்தேன். சரி உன் இஷ்டம் .அதனுடன் children and young people என்பதை சேர்த்துக்கோ. என்றார். ஒவ்வொருமுறையும் இதை சொல்லும்போதும் எழுதும் போதும் நினைவில் வருவார், 

இன்னொன்றும் நினைவில் வருகிறது. தமிழ் பேராசிரியர். சுவாமினாதன் அவர்கள் கற்றுகொள்ளதகும் பாடமாக என்ற தலைப்பில் DSL பற்றி அவரின் பணி நிறைவு ஒட்டி கல்லூரி ஆண்டு இதழில் எழுதிய கட்டுரையும் நான் மறக்க இயலா ஒன்று. உண்மையில் கற்று கொள்ள தகும் பாடமாக ஆசிரியர்கள் இன்று கல்லூரிகளில் இருக்கிறார்களா. என்ன? 

பேராசிரியர். சாமுவேல் லாரன்சுக்கு என் புகழ் அஞ்சலி.

Prabahar Vedamanickam ON DSL




1052. Prabahar Vedamanickam ON DSL





*












பேராசிரியர் சாமுவல் லாரன்ஸ் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று மாலை மரணத்தைத் தழுவினார். நான் மாணவனாகச் சேர்ந்த 80களின் தொடக்கத்தில் அவர் சைக்கிளில் வந்து கவனமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் காட்சி நினைவிலிருக்கிறது. மீண்டும் நான் 87இல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது அவர் ஆங்கிலத்துறைத்தலைவராக இருந்தார். முதலாண்டு தமிழ் மாணவர்களுக்கு part I எனப்படும் மொழிப்பாடம் கற்பிக்க வருவார். இப்போதெல்லாம் துறைத்தலைவர்கள் முதுகலை தவிர வேறு வகுப்புகளுக்குச் செல்லமாட்டார்கள். ஒருநாள் அதுபற்றிக்கேட்டபோது ' அவர்களுக்குத்தான் அனுபவமிக்க நம்மை போன்ற ஆசிரியர்கள் தேவை' என்றார். 


பழைய தலைமுறை ஆசிரியர். காலையில் வந்து வளாகத்தைவிட்டு கடைசியில் போகும் சிலரில் ஒருவராக இருப்பார். ஓய்வுக்குப் பின் கல்லூரிக்கு ஏற்பட்ட பின்னடைவால் மிகுந்த மனப்பாதிப்புக்கு ஆளாகியிருந்தார். நல்லவேளை .. இன்று சுயநினைவோடு இருந்திருந்தால் தேசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை கேள்வியுற்று மிகுந்த மனத்துயரம் அடைந்திருப்பார். 

நன்றி சார். உங்களோடு பேசிக்கழித்த பொழுதுகளுக்கு. 

போய்வாருங்கள்

அரிஅரவேலன் ON Prof DSL




அரிஅரவேலன் யரலவழள




பேராசிரியர் திருமிகு சாமுவேல் லாரன்சு Samuel Lawrence மறைந்தார். 1999ஆம் ஆண்டில் மனிதநேயம் இதழ் ஆசிரியர் அமெரிக்கா சென்றிருந்ததால், அவ்விதழைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பைப் பேராசிரியர் ஏற்றிருந்தார். அப்பொழுது அவ்விதழுக்கு மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்றை அனுப்பியிருந்தேன். அதனைப் படித்த பேராசிரியர் தொலைபேசியில் அழைத்து மூலக்கவிதையையும் எனது மொழிபெயர்ப்பையும் வரிக்குவரி ஒப்பிட்டுப் பாராட்டினார்; தொடர்ந்து எழுதுக என ஊக்குவித்தார். இதுவே அவரோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம்.
சில மாதங்கள் கடந்த பின்னர், ஆசிரியர் திருமிகு சூலியசு நடத்திய பூந்தளிர் நூலகத்தில் பேராசிரியரை நேரிற்கண்டேன். நூலகர் இருவரையும் அறிமுகம் செய்துவைத்ததும் ஓரடி முன்னேவந்து புன்சிரிப்போடு எனது முதுகில் தட்டிக் கொடுத்தார்; கடந்த பிப்ரவரி 24ஆம் நாள் எனது வீட்டிற்கு தன் இணையரோடு வந்து நெடுநேரம் செலவிட்டுச் சென்ற இறுதிச் சந்திப்பு வரை நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கண்டதும் கட்டிக்கொண்டு முதுகில் தட்டுவார். உற்சாகமான மனநிலையிலிருந்தால் "இன்னொரு முறை தட்டட்டா" எனக் கூறிக்கொண்டே தட்டிக்கொடுப்பார்.
காலை நேர உலாவில் தான் கண்ட காட்சிகளை முன்னிறுத்தித் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மனித நேயம் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அவற்றைப் பாராட்டினால், ஓர் உதட்டுச் சுழிப்பில் அப்பாராட்டைப் புறந்தள்ளுவார்; அக்கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றிப் பேசத் தொடங்கினால் உற்சாகமாகிவிடுவார்.
பாராட்டி ஊக்குவிக்கும் உங்களின் குணத்தையும் உடல் நலிவுற்ற நிலையிலும் குன்றாத உங்களின் உற்சாகத்தையும் எண்ணியபடியே விடை தருகிறோம் சார்!

DSL's cremation











As per his wish,
Prof. DSL 
would be cremated 
today - 24.5.19 - at 4 pm.

Thursday, May 23, 2019

OBITUARY









Prof. D. SAMUEL LAWRENCE 

of English Dept.

has passed away - 23.5.19 - around 8 pm.