Friday, November 22, 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே...



நெஞ்சு பொறுக்குதில்லையே...

தா.சாமுவேல் லாரன்ஸ்
முன்னாள் துணை முதல்வர்
அமெரிக்கன் கல்லூரி



          நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடிய பாடல் ஒன்றில், ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது’  என்று ஒரு வரி வரும். சுற்றிலும் நடக்கின்ற பல நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் பார்க்கின்ற பொழுது, ஏன்? ஏப்படி? இப்படியும் நடக்குமா? இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்று பல கேள்விகள் மனதில் தோன்றுகின்றன. இவற்றிற்கு விடை காண முடியவில்லை, என்ன செய்வது? உண்மையிலேயே  ஒண்ணும் புரியவில்லை தான்!
        

  
            குறிப்பாக, நான் பணி புரிந்த, என்னைப் பண்படுத்தி உருவாக்கிய, நான் என்றும் நேசிக்கும் அமெரிக்கன் கல்லூரியின் அன்றைய உன்னத நிலைமையும், இன்றைய இழி நிலையையும் பார்க்கின்ற பொழுது, இனம் புரியா வேதனை மனதைக் கவ்வுகிறது . உயர் கல்வித்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த, பாரம்பரிய மிக்க இக்கல்லூரியில் இன்று நடக்கும் அக்கிரமங்கள், அநியாயங்கள் மனதை வாட்டுகின்றன. தியாக உணர்வுடன் சமுதாய அக்கறையுடன் அமெரிக்க கிறிஸ்தவ இறைத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரிக்கு இப்படி ஒரு நிலையா? அன்பு, உண்மை, நீதி ஆகியவற்றை பரப்பிய இறை மைந்தன் இயேசுவின் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் திருச்சபைத் தலைவர்களாலேயே இத்தகைய வீழ்ச்சி வரவேண்டுமா? என்று பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

            2008 ஆம் ஆண்டு, பேராசை கொண்ட அன்றைய பேராயர் ஆசிர் அவர்களால் துவக்கப்பட்ட இந்த வேதனைப்படலம் இன்றும் தொடர்கிறது. அவர் “நானே எல்லா அதிகாரமும் கொண்ட நிர்வாகத் தலைவன்” என்று தன்னிச்சையாகப் பிரகடனம் செய்து கொண்டு, ஒரு ‘தலையாட்டி பொம்மை’யை முதல்வர் ஆக்கியது; காவல் துறையினர், அடியாட்கள் உதவியுடன் கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது; போலியாக ஒரு ஆட்சி மன்றக் குழுவை ஏற்படுத்தி அதைத்  தனக்கு வேண்டியவர்களால் நிரப்பி, தான் விரும்பிய தீர்மானங்களை நிறைவேற்றியது, சிறிதும் தகுதி இல்லாத தனது மருமகனை முதல்வராக நியமித்தது  ….  என என்னென்ன அநியாயங்கள் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்தார்.

            கல்லூரி ‘குரங்கின் கை பூமாலை’யாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்





அதற்கு எதிராகக் கல்லூரி கல்வி சமூகத்தினர் (Academic Community ) ஒன்றுபட்டு குரல் எழுப்பியிருந்தால் பேராயரால் அன்று ஒன்றும் செய்திருக்கவே முடியாது.  கல்லூரி அப்போதே காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால், நம்மில் அநியாயத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போனவர்கள், நடுநிலை கடைப்பிடிக்கிறேன் என்று கண்ணை மூடிக் கொண்டவர்கள்,  “ ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன “ என்ற உயர்ந்த கொள்கையுடையோர், அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவற்ற முதுகெலும்பில்லாதவர்கள் என்று பல வகைப் பேராசிரியப் பெருமக்கள் இப்பாதகச் செயல்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தனர்.  அநியாயம் தலைவிரித்தாடத் தொடங்கியது.





            அதே நேரத்தில், கல்லூரியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கல்லூரியின் மீது பாசமும், பற்றும் கொண்ட முன்னாள்-இன்னாள் ஆசிரிர்கள், ஆசிரிர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள், நண்பர்கள் ஒருங்கிணைந்து உறுதியுடன் போராட்டத்தை துவக்கினர். அப்போராட்டம் பலவித தடைகள், இடையூறுகள், குழப்பங்கள் ஆகியவற்றைக் கடந்து வெற்றியை நோக்கிச் சென்றது. ஆனால் ‘ நான் கடைசி வரை தலைவனாக இருந்தால் மட்டுமே இப்போராட்டம் வெற்றியடையும் / வெற்றியடைய வேண்டும் ’ என்று ஒரு ஆளுமையும்; தனக்கே உரிய தகுதி, திறமைகளோடு, தலைமை பொறுப்பும் தன்னிடம் வந்த பின்பும் போதிய துணிச்சலுடன் போராட்டத்தை தொடர்ந்து நடத்த இயலாத பிறிதொரு ஆளுமையும், ஆசிரிர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையும், மனச்சோர்வும், போராட்டம் சிறுது சிறிதாக வலுவிழந்து தேய்ந்து ஒரு பரிதாப நிலையை அடையக் காரணமாக இருந்தது.

            எப்படியோ, பலவித ஏற்ற இறக்கங்களை கண்டு, வேதனைகள், சோதனைகள், துரோகங்கள் ஆகியவற்றைக் கடந்து இப்போராட்டம்  இன்றும் தொடர்கிறது. அப்போராளிகளின் துணிவும், உறுதியும் நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

            ஆனால் அநியாயமும், அநீதியும் அரியணையில் அமர்ந்து கோலோச்சுவது தான்  இன்றைய அமெரிக்கன் கல்லூரியின் அவல நிலை.


            முறையற்ற ஆட்சிக் குழுவால், முறையற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, முறையற்ற இன்றைய முதல்வர் (இது குறித்து வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன) ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இக் கல்லூரி ‘திருச்சபை நிறுவனம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.          இது சட்ட விரோதம்.

            ஜாதி, மத பேதமின்றி, எல்லோருக்கும் கல்விப் பணி செய்யப்பட வேண்டும் என்பது தான் இதை நிறுவிய இறையடியார்களின் நோக்கம். அமெரிக்கன் கல்லூரியின் சிறப்பு அடையாளமும், அடித்தளமும் இதுதான். இது திருச்சபையுடன் தொடர்புடையதாக இருந்தாலும், திருச்சபையின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டது அல்ல என்பதே உண்மை. அக்கருத்தையே இன்றைய அமெரிக்க அறங்காவலர்களும் (Trustees) இங்குள்ள திருச்சபைத் தலைவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கியிருக்கிறார்கள். ஆனாலும் இது திருச்சபை நிறுவனம் என்று திரும்ப திரும்பக் கூறி எல்லோரையும் ஏமாற்றுவது  அநியாயம். இதற்குப் படித்தவர்களும், அன்று கல்லூரிக்காக ‘மைக்’ பிடித்துவிட்டு இன்று பதவிக்காக கால் பிடிக்கும் பலரும் உடன் போவது அநியாயத்திலும் அநியாயம்.

            முன்போ மாணவர் சேர்க்கையிலும் சரி, ஆசிரிர், பணியாளர்  நியமத்திலும் சரி திறமை, ஆற்றல், அனுபவம் ஆகியவற்றிக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படும். ஆனால் இப்பொழுது விதிமுறைகள் மீறப்படுகின்றன; பாரம்பரியங்கள் தூக்கி எறியப்படுகின்றன. மதம், ஜாதி, வேண்டியவன், வேண்டாதவன், ஆதரவாளன், எதிர்ப்பாளன் என்ற அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படுகின்றன.  அதுமட்டுமல்ல முன்பே ‘நெற்றிக்கண்’ இதழில் கூறியபடி இலட்சக்கணக்கில் பணமும் கொடுக்க வேண்டும். அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி கை நிறைய வாங்கப்படுவதாகக் கேள்வி.





            நியாயம், நீதி, உண்மை, நேர்மை போன்ற கிறிஸ்தவ நெறி முறைகளுக்கு எதிராக, திருச்சபையின் பெயரால் இத்தகைய அவலங்களை வைத்துக்கொண்டு  கல்லூரி வளாகம் முழுவதும் திருமறை வாசகங்களை ஒட்டி வைத்திருப்பது இன்னும் ஒரு வெட்கக் கேடு!

            கல்லூரிக்கா உண்ணாவிரதமிருந்த ஆசிரிர், அலுவலர், மாணவர்களைத் தாக்குவதற்காக கல்லூரி சிற்றாலயத்திலேயே கற்குவியல்களை பதுக்கி வைத்திருந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?









130 ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி, மதுரைக்கு பெருமை சேர்த்த கல்லூரி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவு புகட்டி  அறவழி நடத்தி, பல துறைகளில் உயர்நிலையை அடையச் செய்த இக் கல்விக் கோவிலின் புனித வளாகத்தில் இன்று சமுதாய உணர்வோ, நியாய உணர்வோ சிறிதும் இல்லாமல் எதைப் பற்றியும் கவலைப்படாத பெரும்பாலான ஆசிரியப் பெருமக்கள் ஒருபுறம்; சந்தைக் கல்வியைக் கற்று, சமுதாய அக்கறை சிறிதும் இல்லாமல், எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் அதைப்பற்றிய உணர்வும் இல்லாமல் செல்லும் மாணவர்கள் மறுபுறம்.

இப்படி கண்முன்னால் அமெரிக்கன் கல்லூரி சிதைந்து, அழிந்து போவதைக் காணும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே!