*
அந்தக் குறு விளக்க அறிக்கையின் அடக்கம் இதுவே:
=============================================================
அமெரிக்கன் கல்லூரி பேராயரின் சொத்தா? மக்கள் சொத்தா?
- ஒரு விளக்கம்.
American Board of Commissioners for Foreign Mission எனும் அமைப்பால் 1881-ல் அமெரிக்கன் கல்லூரி ஒரு கிறித்துவக் கல்லூரியாக நிறுவப்பட்டது.
1904-ல் பசுமலையிலிருந்து மதுரைக்கு அது இடம் பெயர்ந்த போது, “உயர்கல்வியை எல்லாத் தரப்பினருக்கும் வழங்கும் ஒரு கிறித்துவ நிறுவனம் இது” என்ற குறிக்கோளை மறைதிரு ஜம்புரோ எனும் இறையடியார் முன் வைத்தார். மதுரை நகருக்குள் கல்லூரி வருவதற்கு முனைப்பாயிருந்த ஜம்புரோ அவர்களின் குறிக்கோள் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.
1934-ல் ABCFM அமெரிக்கன் கல்லூரியைத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக மாற்ற முடிவெடுத்த போது, அதன் முதல் ஆட்சிமன்றக் கூட்டத்திலேயே அதன் அனைத்து உரிமைகளையும் சொத்துக்களையும் ஆட்சிமன்றக் குழுவிற்கு மாற்றி, அது ஒரு பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாக மாற்றப்பட்டது.
1949-ல் ABCFM-ன் அமெரிக்க–மதுரா மிஷன் CSI தென்னிந்தியத் திருச்சபையோடு இணைந்தாலும், அமெரிக்கன் கல்லூரி அதன் தனித்த அடையாளங்களோடு தனி சொசைட்டியாகவே இன்றளவும் இயங்கி வருகிறதேயல்லாமல் அது ஒரு போதும் திருமண்டலத்திற்குச் சொந்தமானதாக மாறவில்லை.
அமெரிக்கன் கல்லூரியின் ஆட்சிமன்ற அரசியலமைப்புச் சட்டமானது மதுரை-இராமநாதபுர திருமண்டலப் பேராயரை பதவி வழி ஓர் உறுப்பினராகவே அங்கீகரித்துள்ளது. அவர் ஆட்சிமன்றக் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தும் உரிமை மட்டுமே உள்ளவர். இதைத் தவிர கல்லூரியை நிர்வகிக்கும் அன்றாட நடவடிக்கைகளில் அவர் பங்கு பெற இயலாது; கூடாது. மாறாக, அவ்வுரிமைகள் அனைத்தும் முதல்வரும் செயலருமாக இருப்பவருக்கே கடந்த 127 ஆண்டுகளாக வருமுன் காணும் ஆற்றல் மிக்க ஆட்சிக் குழுவினரால் வழங்கப்பட்டு உள்ளது.
கிறிஸ்துவ மதிப்பீடுகளை உள்ளடக்கிய பரந்துபட்ட கல்வியைச் சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோளையுடைய முன்னோர்கள் இயற்றிய அமெரிக்கன் கல்லூரியின் அரசியலமைப்புச் சட்டத்தை பெரிதும் மதித்தே இதுவரை அத்தனை பேராயர்களும் இயங்கி வந்துள்ளனர்.
ஆனால் தற்போதைய பேராயர், மறைதிரு கிறிஸ்டோபர் ஆசிர் அவர்கள் நூறாண்டுகளைக் கடந்த இதன் உயர்ந்த பாரம்பரியத்தைச் சிதைத்து தன் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முனைந்துள்ளார்.
அமெரிக்கன் கல்லூரி CSI திருமண்டலத்திற்குச் சொந்தமானது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த பேராயர் அவர்கள் தன் சொந்த மருமகன் டாக்டர் தவமணி கிறிஸ்டோபரைப் பல மூத்த பேராசிரியர்களைப் புறக்கணித்து, நிதிக்காப்பாளராக நியமிக்க ஆட்சிமன்றக் குழுவைப் பயன்படுத்தி இருக்கிறார்.
அவருரைய ஆதரவாளர்களை தன் சொல்லிற்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்களைத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவும்படி ஆட்சி மன்றக் குழுவிற்குள் புகுத்தி இருக்கிறார்.
பேராயரின் நோக்கத்திற்குத் தற்போதைய முதல்வரும் செயலருமான டாக்டர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் உடன்படாத சூழலைப் புரிந்து கொண்டு
முதல்வர் கல்லூரி வளாகத்திற்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
போதே அவர் விடுப்பில் இருப்பதாக பொய் சொல்லி,
மருமகன் உதவியோடு, துணை முதல்வர் ஜார்ஜ் செல்வக்குமாரைக்
கைப்பாவையாகப் பயன்படுத்தி முதல்வரின் அறையைப் பூட்டி,
துணை முதல்வரை முதல்வராக்கித் தன் நோக்கங்களை
நிறைவேற்றும்
முயற்சியில் நூற்றாண்டைக் கடந்த கல்லூரியின் பெருமை, மேன்மை,
மரபைக் காட்டிலும் தன்நோக்கமே பெரிது என செயல்பட
இறங்கியுள்ளார்.
*கிறித்துவரல்லாதவர்களை ஆசிரியப் பணியில் அமர்த்தக் கூடாது, பணி நியமன உரிமையை முற்றாகத் தனக்கே உரிமையாக்க வேண்டும் எனும் வெளிப்படையான கோரிக்கைகளோடு அமெரிக்கன் கல்லூரியைத் திருமண்டலத்தோடு இணைக்கும் செயலைத் தீவிரப் படுத்தியுள்ளார்.
*இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் அமெரிக்கன் கல்லூரியின் ஆசிரியர் கழகமான MUTA-வும் ஆசிரியர்களும் கல்லூரியைக் காக்கும் முயற்சியில் தற்போதைய முதல்வர் டாக்டர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாருடன் நிற்பதாக உறுதியளித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
*இந்நிலையில் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுநல விரும்பிகள் ஆகியோர் மதுரையின் பெருமைமிக்க பாரம்ப்பரியச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும், மதுரையின் அனைத்து மக்களுக்கும் உரிமையான அமெரிக்கன் கல்லூரியைப் பாதுகாக்கும் புனிதப் பணியில் இணைய அழைக்கிறோம்.
அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்புக் குழு
INITIATIVE FOR PROTECTING THE AMERICAN COLLEGE
புரவலர்
பேரா. திரு. சாலமன் பாப்பையா
தலைவர்
பேரா. திரு. வின்பிரட்
துணைத்தலைவர்
பேரா. திரு. சாமுவேல் லாரன்ஸ் மற்றும் பேரா. திரு. வசந்தன்
செயலாளர்
பேரா. திரு. மூட்டா பார்த்த சாரதி
இணைச் செயலாளர்
பேரா. திரு. மூட்டா கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment