*
எனது கதையும்,
கொஞ்சம் என் DE-ADDICTION-ம் ...
சென்ற மாதம் 27ம் தேதி கல்லூரி வளாகத்தினுள் எனக்குக்
கிடைத்த ஒரு சோகமான அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. சற்றே இருந்த
ஒரு உடல் நலக் குறைவால் – முழங்கால் வலி - உடனே உங்களோடு அதைப் பகிர்ந்து கொள்ள
முடியாமல், இப்போது தான் அதைப் பற்றிச் சொல்லப் போகிறேன். சொல்லாமலே இருப்பதை விட
காலம் தாழ்த்தியாவது சொல்ல நினைக்கிறேன்.
நான் அமெரிக்கன் கல்லூரியின் மாணவனல்ல. தியாகராஜர் கல்லூரியில்
படிக்கும் போதே மதுரை மாணவர்களுக்கே உரித்தான ஏக்கம் மட்டும் இருந்தது. 1970ல் கல்லூரியில்
demonstrator ஆக நுழைந்தேன் – ஓராண்டில் பதவி உயர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில்.
அடுத்த ஆண்டு துறைத் தலைவர் முயற்சித்தும் நடக்காது போயிற்று. அதன் பின் நடந்தவை
எல்லாமே ஏட்டிக்குப் போட்டியான “விளையாட்டுகள்” தான். எனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காது பல ஆண்டுகள் நழுவின. அதன் பின்னும், நம் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கக் கூடிய எந்த ‘bones’ம் எனக்கு மட்டும் எப்போதும் எட்டாக் கனியாகவே இருந்தது. ஓய்வு பெறும் காலம் வரையும் அது நீடித்தது.எனக்குப் பின் வந்தோரே முன் வந்தோராக, துறைத்தலைவராக இருக்கும் போது தான் நான் ஓய்வு பெற்றேன். எல்லாம் சில பெரிய மனிதர்களின் ‘ego problems’களால் நடந்த திருவிளையாடல்கள். சரி … அவைகளெல்லாம் போகட்டும் ...
எல்லாமே ஏட்டிக்குப் போட்டியான “விளையாட்டுகள்” தான். எனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காது பல ஆண்டுகள் நழுவின. அதன் பின்னும், நம் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கக் கூடிய எந்த ‘bones’ம் எனக்கு மட்டும் எப்போதும் எட்டாக் கனியாகவே இருந்தது. ஓய்வு பெறும் காலம் வரையும் அது நீடித்தது.எனக்குப் பின் வந்தோரே முன் வந்தோராக, துறைத்தலைவராக இருக்கும் போது தான் நான் ஓய்வு பெற்றேன். எல்லாம் சில பெரிய மனிதர்களின் ‘ego problems’களால் நடந்த திருவிளையாடல்கள். சரி … அவைகளெல்லாம் போகட்டும் ...
ஆனால் இந்தப் பின்னடைவுகள் எப்போதும் என்னை எங்கேயும் நிறுத்தவில்லை.
கற்பித்தது பிடித்தது; கற்பது பிடித்தது. மாணவர்களை நேசித்தேன்; அதற்குப்
பதிலாக, என் தகுதிகளையும் மீறி மாணவர்களால் மிகவும்
நேசிக்கப்பட்டேன். கல்லூரியை மிக மிக நேசித்தேன். கல்லூரியின் கட்டிடங்கள்,
சாலைகள், முக்கு முடுக்குகள் என்று எல்லாவற்றையும் நேசித்தேன். நான் புகைப்படம் எடுக்காத
ஒரு சிறு பகுதியும் கல்லூரியில் இருக்காது என்பது என் நேசத்திற்கு ஒரு சின்ன சாட்சி.
என் வாழ்க்கையையே கல்லூரியோடு இயைந்த வாழ்க்கையாக ஆகிப் போய் விட்டது. வெகு நாள் ஆசைப்பட்டது போல் என் பிள்ளைகளின் திருமணங்களையும் பல சங்கடங்களின் ஊடே இக்கல்லூரியின் உள்ளேயே
நடத்தினேன். என் சாவிற்குப் பின் கோவில் குளம் ஏதும் கொண்டு போக வேண்டாம்;
ஒரு வேளை அதிகமாக நீங்கள் ஆசைப்பட்டால் கல்லூரிக் கோவிலுக்கு வேண்டுமானால் கொண்டு செல்லுங்கள்
என்று குடும்பத்தினரிடம் ஒரு காலத்தில் சொல்லியுமுள்ளேன்.
ஓய்வு பெற்றதும் பல ஆசிரியர்கள் அதன் பின் கல்லூரி பக்கமே எட்டிப்
பார்ப்பதும் கிடையாது. அதுவும் கல்லூரியில் இருக்கும் போது பல ‘bones’ பெற்ற பேராசிரியர்களும்
இங்கு தலைநீட்டுவது என்பதே கூட கிடையாது. ஒரு வேளை
அவர்கள் இதுவரை கல்லூரியோடு வைத்திருந்த தொடர்பு ஒரு விரும்பாத திருமண உறவு போல்
இருந்து, இப்போது ‘கழட்டி விட்ட பின்’
அப்பாடா ... என்று நிம்மதியாக ஓடிப் போய் விட்டார்களோ என்று கூட எனக்குத் தோன்றும். ஆனால் எனக்கு அப்படியில்லை. ஒய்வு பெற்ற பிறகும்
அடிக்கடி கல்லூரி சென்று வந்தேன். வெளியூர் சென்று மீண்டும் மதுரைக்குள் நுழைந்ததும்
அடுத்ததாகச் செய்வது அநேகமாக கல்லூரிக்கு வந்து சிறிது நேரம் வளாகக் காற்றை
சுவாசிப்பதுவே வழக்கமாகிப் போனது. கல்லூரியோடு அப்படி ஒரு ADDICTION ஆகிப்
போனது.
EFFORTS ON MY DE-ADDICTION
பின் போராட்டங்கள் வெடித்தன. அப்போதும் அடிக்கடி கல்லூரி சென்று
வந்தேன். போராளிகளோடு உடன் இருப்பதே ஒரு திருப்தியாக இருந்தது. இன்று வரை
இணையத்தின் மூலம் கல்லூரி நிகழ்வுகளைத் தொடர்ந்து பரிமாறிக்கொண்டு வருகிறேன். (ஆனாலும்
நான் பரிமாறியதை அதிகமாக நீங்கள் யாரும் வாசித்ததாகவும் தெரியவில்லை!) இச்சூழலில்
கடந்த சில மாதங்களாக எனக்குக் கல்லூரிக்குச் செல்வதே ஒரு பெரிய adventureஆகப் போய் விட்டது. வாசலிலேயே நிறுத்தப்படுவது, அல்லது
ஏதாவது வசவுகளைத் தாண்டிச் செல்வது என்றானது. இதிலிருந்து மீண்டு வரவேண்டுமென, கஷ்டப்பட்டு கல்லூரிக்குள் செல்லும் வழக்கத்தை விட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
அதாவது, DE-ADDICTION-க்குப் பழகிக் கொண்டு
வந்தேன். ஆனால் அதற்குள் ...
டிசம்பர் 27-ம் தேதி 1980-83 ல் படித்த பழைய மாணவர்கள்
சிலர் ஒன்று கூடுவதாகச் சொன்னார்கள். அடுத்த ஆண்டு முழு வகுப்பையும் வைத்து விழா
நடத்த வேண்டும்; ஆகவே இந்த ஆண்டு சிலர் மட்டும் ஒன்று சேரப் போகிறோம் என்றார்கள்.மற்ற ஆசிரியர்கள் யாரையும் அடுத்த ஆண்டு அழைக்கிறோம்; இந்த ஆண்டு எங்களோடு நீங்கள்
மட்டும் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார்கள். சரியென்றேன். ஆனால் கல்லூரிக்குள் நான்
வருவது சிரமம் என்றேன். நாங்கள் உங்களுக்காக வெளியே காத்திருக்கிறோம் என்றார்கள்.
நான் வேண்டுமென்றே 15 நிமிடம் தாமதமாகச் சென்றேன். அதற்குள் எட்டு மாணவர்கள்
கல்லூரி வாசலுக்குள் 10 மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். இரு சக்கர
வண்டியில், நான் உள்ளே நுழைந்தேன். வாயிற்காப்போர்கள் இருவர் என்னையும் உள்ளே
விட்டு விட்டார்கள்! அதே பத்து மீட்டர் தூரத்தில் இருந்த மாணவர்களோடு பேசிக்
கொண்டிருந்தேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. வாயிற்காப்போர்கள் என்னிடம்
வந்து தனியே அழைத்தார்கள். மிக மரியாதையாகப் பேசினார்கள். ”முதல்வரிடமிருந்து போன்
வந்தது; உங்களை உடனே வெளியே அனுப்பும்படி
உத்தரவு வந்தது” என்றார்கள்.
ஓரளவு எதிர்பார்த்தது நடந்ததால் எனக்கு இதில் எந்த
எதிர்ப்பு உணர்வும் வரவில்லை; அதோடு மாணவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கவும்
விரும்பவில்லை. அவர்களே என்னென்னவோ சொல்லித்தான் உள்ளே சென்றிருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கல்லூரிக்குள் காலாற நடந்து வர ஆசை என்று அப்போது தான் சொல்லிக்
கொண்டிருந்தார்கள். நான் அவர்களை நீங்கள் கல்லூரிக்குள் சுற்றி வாருங்கள்; நான்
‘பாதுகாப்பான’ பத்து மீட்டர் தூரத்தில் வெளியே நிற்கிறேன் என்றேன்.
வந்திருந்த
மாணவர்களுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி. வந்திருந்தவர்களில் இருவர் வக்கீல்கள். ஒரு
வக்கீல் இந்த அநியாயத்திற்கு எதிர்த்து உள்ளே செல்வோம் என்றான். இன்னும்
கொஞ்சம் கல்லூரி நிலைமை தெரிந்த வக்கீலின் கண்கள் நீர் கோத்து நின்றன. ’உங்களுக்கு
இந்த நிலையா’ என்று சொன்னார்கள். ஆசுவாசப்படுத்தி அவர்களை உள்ளே அனுப்பி விட்டு
வெளியே பத்து மீட்டர் தூரத்தில் அவர்களுக்காகக் காத்து நின்றேன்.
இதில் இன்னொரு வேடிக்கையும் நடந்துள்ளது. மாணவர்கள்
வாசலிலிருந்து மெயின் ஹால் வரை செல்வதற்குள் இருவர் பைக்கில்
வந்திருக்கிறார்கள். என் பெயரைச் சொல்லி, அவர் எங்கே என்று கேட்டிருக்கிறார்கள் – thorough
checking !!! நான் வெளியே நிற்கிறேன் என்று சொன்னதும், திருப்தியாக
திரும்பிக்கொண்டே – ‘ எங்கள் நம்பர் ஒன் எதிரி ‘ என்று அவர்களிடம் கத்திச் சொல்லிவிட்டுச் சென்றார்களாம்.
Thank you Dr.Christober.
பிறகு இன்னொரு ஆசிரியரிடம் அவர் ‘
அவர்தான் ப்ளாக்ல என்னை எதிர்த்து எழுதுறார்ல; பிறகு அவருக்கு
உள்ளே என்ன வேலை? ‘ என்று கோபமாகக் கேட்டாராம்.